கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்கல்லு என்ற இயற்கைவளம் கொழிக்கும் இடத்தில் கொட்டுவதற்கு மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சிவில் சமூகத்தினரால் புத்தளத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இன, மத கட்சி, வயது வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த திட்டத்திற்கு எதிரான. தொடர்ச்சியாக எட்டாவது நாளாக சத்தியகிரக போராட்டம் புத்தளத்தில் உள்ள கொழும்பு முக திடலில் நடைபெற்று வருகிறது.இவ்வாறு பாகுபாடுகள் இன்றிய மக்கள் போராட்டம் , இலங்கைக்கு புதியதொரு முன்மாதிரியையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
கழிவகற்றல் முறைக்கு எத்தனையோ சாத்தியமான வழிகள் இருந்தும், அவற்றை புறந்தள்ளி அருவக்கல்லு என்ற இடத்தை தெரிவு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதாகும். காரணம் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து உருவாக்கப்படும் குறித்த திட்டம் வில்பத்து சரணாலயத்திற்கு வெறும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலும், இலங்கையின் மீன் உற்பத்திகளில் பிரதான பிரதேசமான கற்பிட்டி களப்பில் இருந்து வெறும் இருநூறு மீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. இதற்கு மேலதிகமாக இலங்கையின் மிகப்பெரிய சுத்தமான குடிநீர் ஊற்றுக்கள் இந்த பிரதேசத்தில் அமைந்திருப்பதாக ஏற்கனவே சூழலியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வில்பத்துவை பாதுகாப்போம் என்று கடந்த காலங்களில் அடிக்கடி முழங்கிய இலங்கையின் அரசியல்வாதிகள் , சூழலியலாளர்கள் மற்றும் ஊடகங்களும் இயற்கை வளங்களை ஆபத்தில் தள்ளும் இந்த திட்டம் தொடர்பாக கவனம் செலுத்தாமல் மௌனமாக இருப்பதை குரல்கள் இயக்கம் அவர்களின் இரட்டை நிலைப்பாடாகவே பார்க்கிறது.
ஏற்கனவே புத்தளம் சீமந்து உற்பத்தி நிலையம் மற்றும் நுரைச்சோலையில் அமைந்திருக்கும் அனல் மின் உற்பத்தி நிலையம் காரணமாக அங்குள்ள மக்கள் பாரிய சூழலியல் பிரச்சினைகள் மற்றும் நோய் தொற்றுகளுக்கு முகம் கொடுத்துவரும் நிலையில் , இதையொத்த இன்னுமொரு திட்டத்தை அதே மக்களின் தலையில் கட்டிவிட நினைக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை குரல்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
புத்தளத்தில் சிவில் சமூக அமைப்புக்கள் ஊடாக எழுந்திருக்கின்ற எதிர்ப்பு அலைகள், நாடு பூராகவும் அறியப்படும் பட்சத்தில் அரசாங்கத்திற்குரிய ஒரு அழுத்தமாக உருமாறும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
அரசியல்வாதிகளை நம்பிக் கொண்டிராமால் சிவில் சமூகம் எடுக்கும் இவ்வகையான முஸ்தீபுகள் இன்னும் இலங்க்கையில் பல இடங்களிலும் பரவலாக்கப்படவேண்டும்.அந்த அடிப்படையில் அருவக்கல்லுப் போராட்டம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று குரல்கள் இயக்கம் நம்புகிறது.
சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களுக்கு குரல்கள் இயக்கமும் ஒரு சிவில் அமைப்பு என்ற அடிப்படையில் களத்தில் நின்று இப்பிரச்சினைக்காக போராடும் அனைத்து சிவில் அமைப்புகளோடும் குரல்கள் இயக்கம் ஆத்மார்த்தமாக உடன்பட்டுக் கொள்வதோடு இப்போராட்டம் வெற்றி பெறுவதற்கு குரல்கள் இயக்கம் மனமார்ந்த வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
no replies