Shanmuga Habaya Crisis -Field visit to Trincomalee
திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் சென்ற வாரம் 5 முஸ்லீம் ஆசிரியைகள் தங்களின் கலாச்சார ஆடைகளை அணிந்து பாடசாலை செல்வதற்கு அதிபராலும் பாடசாலை நிர்வாகத்தினராலும் தடைவிதிக்கப்பட்டதையும் அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் அனைவரும் அறிந்ததே.
அதனைத் தொடர்ந்து வெளிப்படையாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட ஆசிரியைகளைச் சந்திப்பதற்காகவும், துல்லியமான தகவல்களைத் திரட்டுவதற்காகவும் குரல்கள் இயக்கம் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்தது.
குரல்கள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சப்ரி,சட்டத்தரணிகளான முஹைமின் காலித்,ஹஸ்ஸான் ருஷ்தி ,கமால் அஹ்மட் ஆகியோர் குரல்கள் இயக்கம் சார்பாக திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் மற்றும்அவர்களின் கணவர்மார்களைச் சந்தித்து நடந்தேறிய சம்பவங்களின் முழுத்தகவல்களையும் பெற்றுக் கொண்டதோடு அடுத்த கட்ட நகர்வுகளுக்கான ஆலோசனைகளையும் குரல்கள் இயக்கம் வழங்கியது.
ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தல்,சம்பவம் தொடர்பான முறைப்டாடொன்றை மனித உரிமை ஆணையகத்திற்கு சமர்ப்பித்தல்,குறிப்பிட்ட ஆசிரியைகளின் கணவர்கள் பாடசாலை அதிபரை மிரட்டியதாக பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரத்திற்கு செய்தித்தளங்களுக்கு எதிராக மான நஷ்ட வழக்குத் தாக்கல் செய்தல்,இனவாதத்தை தூண்டும் வகையில் முக நூல்களிலும் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு பொய்ப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அலுவலக நேரத்தில் கடமைக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசாங்க ஊழியர்களுக்கு எதிராகவும்,முகனூல்களில் இனவாத நச்சுக்கருத்துக்களைப் பரப்பியவர்களுக்கெதிராகவும் இன மத பாரபட்சமின்றி குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
குரல்கள் இயக்கத்தின் திருகோணமலை விஜயத்திற்கு சட்டத்தரணி கமால் அஹ்மத் அவர்கள் தலைமை தாங்கினார்.
ஆசிரியைகளும் அவர்களது கணவன்மாரும் ஒத்துழைப்புத்தருவதாகவும் உறுதியளித்தனர்.

no replies

Leave your comment