Media Statement on Kandy Riot

2018.03.12

கடந்த சில வருடங்களாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரங்களும் திட்டமிட்ட வன்முறைகளும் சில பேரினவாத இனவாத குழுக்களால் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. முஸ்லிம்களின் கலாச்சார விடயங்கள், மத ஸ்தாபனங்கள், பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் இருப்பு என்பன இந்த இனவாத குழுக்களின் இலக்குகளாக இருந்து வந்திருக்கிறன.

தொடர்ச்சியான இனவாத செயல்பாடுகளின் ஒருபகுதியாக சென்ற பெப்ரவரி மாதம் 26ம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாரையில் முஸ்லீம் உணவகங்களில் சிங்களவர்கள் கர்ப்பம் தரிப்பதைத் தடுப்பதற்கான மருந்துகள் கலக்கப்படுகின்றன என்று பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரத்தின் பின்னணியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 4 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன்  அம்பாரை ஜும்மா பள்ளிவாசலும் இனவாத குழுக்களால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.

மத்திய மாகாணத்தின் திகணவில் ஒரு விபத்து தொடர்பான சர்ச்சையில் ஒரு சிங்கள சாரதி நான்கு முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் இறந்திருந்தார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்த நான்கு முஸ்லிம்களும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த சாரதியின் மரணத்தோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. சட்டம் தனது கடமையை செய்யவேண்டிய நேரத்தில், சட்டத்திற்குப் புறம்பாக இனவாத குழுக்களால் ஏற்கனவே தீட்டி வைத்திருந்த திட்டத்திற்கு அமைய  கண்டி மாவட்டம் எங்கும் ஏற்கனவே  திட்டமிடப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிரான மிகப்பெரும் கலவரம் 2018-03-05  அன்று  கட்டவிழ்த்துவிடப்பட்டது.

திகணவில் ஆரம்பித்து தொடர்ந்தும் பல நாட்களாக முழு மத்திய மாகாணம் எங்கும் பரவியிருக்கும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான வீடுகள், வியாபார ஸ்தலங்கள் மற்றும் வணக்கஸ்தலங்கள் உள்ளடங்கலாக ஆயிரக்ககணக்கான கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இனவாத குழுக்களால் நிர்மூலமாக்கப்பட்டிருகின்றன. ஒரு எரிக்கப்பட்ட வீட்டில் சிக்கி 24 வயது முஸ்லீம் வாலிபர் ஒருவர் மரணித்திருக்கிறார். பல நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டும், நாடு முழுவதும் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்படுத்தப்பட்டும், சமூக ஊடகங்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்த நிலையிலும்  இனவாத குழுக்கள் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை நடத்தியிருப்பது போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறியிருக்கிறார்கள் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

சகல பிரஜைகளுக்கும் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றும் மத உரிமையும் , இந்த நாட்டில் எந்த பகுதியிலும் வசிக்கும் உரிமையும் அடிப்படை மனித உரிமைகளாக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் படி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், வன்முறையையும் ஆயுதங்களையும்கொண்டு இலங்கை பிரஜைகளான ஒரு பிரிவினருக்கு இந்த உரிமைகளை மறுப்பதற்கு எத்தனிக்கும்  இனவாத குழுக்களின் முயற்சிகள்  இன மத பேதமற்று முழு இலங்கையர்களாலும் எதிர்க்கப்படல்  வேண்டும்  என்பதே குரல்கள் இயக்கத்தின் நிலைப்பாடாகும்.

இலங்கை வரலாறு நெடுகிலும் முஸ்லிம்கள் சமாதான சகவாழ்வை விரும்பும்,சட்டத்தை அடிபணியும் இலங்கை பிரஜைகளாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக இலங்கை முஸ்லீம்களின் மீது பேரினவாத குழுக்களால் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்படும் இவ்வாறான அத்துமீறல்களைப் பற்றி இலங்கை அரசு பராமுகமாகவே இருந்து வருகின்றது. இனவாத பிரச்சாரங்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கையை அரசாங்கமும் பாதிகாப்பு தரப்பும் எடுக்க தவறியதன் காரணமாக  சட்டமும் ஒழுங்கும் மீறப்பட்டு சிறுமான்மை மக்கள் மத்தியில் பாதுகாப்பு அச்சம் தோன்றியிருக்கின்றது. இதன் காரணமாக இலங்கையில் அனைத்து இன மக்களோடும் சகவாழ்வுடன் அமைதியாக  வாழ விரும்பும் முஸ்லீம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்படும் இன வன்முறைகளுக்கு பொலீசாரும்,அரசும் முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்று குரல்கள் இயக்கம் வலியுத்திக் கூறவிரும்புகிறது.

இதற்கு மேலும் இவ்வாறன சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் இனவாத பிரச்சாரர்களுக்கு எதிராகவும் வன்முறையாளர்களுக்கு எதிராகவும் பாரபட்சம் இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கும் படியும் இனவாதத்தை இலங்கையில் விதைக்கும் சக்திகளைக் கண்டு அவர்களை முளையிலேயே கிள்ளி எறியுமாறும்,நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு குரல்கள் இயக்கம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது.

arabic version  Sinhala version English version Tamil version

no replies

Leave your comment